முஹம்மது இஸ்மாயில் பாத்திமா ரிஹானா

சமூகப் பணிக்கு பல தடைகள் குறித்து பலரும் பல விதமாக சொன்னாலும் துணிச்சல் இருந்தால் நிச்சயம் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட முடியும். இந்தச் சமூகப் பணிக்கு எனது கல்வி பெரிதும் துணையாக இருந்தது என்பதே உண்மை.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் பாத்திமா ரிஹானா ஆகிய நான் எனது ஆரம்ப கல்வியை நிந்தவூர் கமு/கமு/அல்மினா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கமு/கமு அல் அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் உயர் கல்வியாக தொழில்வான்மையிலான சமூகப் பணி டிப்ளோமா கற்கை நெறியை கொழும்பு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திலும் (NISP) பூர்த்தி செய்தேன். பின்னர் அந்தத் துறையில் என்னை வளர்த்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பாணந்துறை அல்பஹரியா மத்திய கல்லூரியில் எனது சேவையை ஆரம்பித்ததோடு உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளேன்.

எனது பெற்றோர் ஆசிரியர்களாக இருந்ததோடு எனது தந்தையை நான் சிறு வயதிலே இழந்துவிட்டேன். தாயின் அரவணைப்பில் நாங்கள் ஐந்து பிள்ளைகள் வளர்ந்தோம். திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்ட எனக்கு ஒரு மகள் இருக்கின்றார். ஆரம்ப காலம் முதலே சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு எனக்கு சமூகக்கல்வி பயிற்சிநெறி பெரிதும் உதவியது. அந்த பயிற்சியின் போது மேற்கொண்ட களப்பயிற்சிகள் எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கின்றது. மொழிப் பிரச்சினை இல்லாததன் காரணமாக பல மொழி பேசக்கூடியவர்களுடன் சேர்ந்து இந்தப் பணியை என்னால் சரியாக முன்னெடுக்க முடிந்தது. நான் வேலை செய்த பாடசாலையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியுள்ளேன். அத்தோடு எமது ஊரிலும் அந்தப் பணிகளை சரிவர நிறைவேற்றியிருக்கின்றேன்.

இதன் ஊடாக கல்விக்கு உதவுதல், வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றியுள்ள அனுபவம் எனக்கிருக்கின்றது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகி இன்னலுறும் பெண்களுக்கும் உளவள ஆலோசகராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். எனது இந்த செயற்பாடுகளுக்கு எனது குடும்பம் பூரண உதவிகளை செய்துகொண்டிருக்கின்றது.

எமது சமூகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் வாழ்வதார பிரச்சினைகளையே எதிர்நோக்குகின்றார்கள், குடும்பத்தில் உள்ள ஆண்களின் செயற்பாடுகள், தொழிலின்மை, சமூகத்தில் காணப்படும் போதை வஸ்துப் பாவணை போன்றன பெரிதும் பெண்களை பாதிக்கின்ற நடவடிக்கைளாக இருக்கின்றன. அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் உதவி செய்துள்ள சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இத்தகையவர்களின் திறமைகளை இனங்கண்டு அவற்றை வெளிக்கொணர்ந்து தொழில்வாய்ப்புக்களுக்கான வழிகாட்டல்களையும் மேற்கொள்ள முடிந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பெண்கள் இன்னொருவரிடம் தங்கி இராது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உத்வேகம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. திறமையிருந்தும் அதற்காக வழிவகைகள் இல்லாதவர்களுக்கு வழிகாட்ட முடிந்துள்ளது. குடும்ப பிளவுகளின் போது அதன் ஊடாக பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகின்ற போது அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் சுபீட்சமாக அமைய வாய்ப்புகள் அமைகின்றது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களுக்கும் அடிப்படை வசதியற்றவர்களுக்கும் நிந்தவூர் பெரிய பள்ளிவாசலின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற ஸக்காத் நிதியத்தின் ஊடாக தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல்களை அணுகி தேவையுடையோருக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுக்கின்றோம். பெண்கள் அமைப்புக்களின் ஊடாகவும் உதவிகள் வழங்கியிருக்கின்றோம். அரசியல் பிரவேசத்திற்கு முன்பு என்னுடைய சமூகப் பணிகள் அனைத்தும் உள்ளூர் பிரதேசத்திற்குள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தான் 2018 ஆம் ஆண்டு எனக்கு அரசியலில் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. சமூகத்தில் விமர்சனங்கள் ஏற்படும் என்ற எண்ணம் இருந்தாலும் கணவரின் ஒத்துழைப்போடு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடிந்தது. நான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டேன். எமது பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவது பெண்ணாக இருப்பதையிட்டு பெருமிதம் அடைகின்றேன். பிரதேச சபையில் ஒரு கௌரவ உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை என்னில் இருந்த சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும் திறமைகளையும் மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். என்னுள் இருந்த செயற்பாட்டாளரை நான் மேலும் வலுப்படுத்திக்கொண்டேன் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியே என்னுடைய அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

என்னுடைய அரசியல் பயணத்தில் ஆண் அரசியல் வாதிகளினால் பெரும் சவால்களுக்கு நான் முகம்கொடுக்கவில்லை. தேர்தல் காலங்களில் ஆண்களும் எனக்கு ஆதரவாக இருந்ததோடு அதனூடாக அவர்களின் குடும்பங்களின் ஆதரவினையும் பெற்றுக்கொண்டேன். இது எனது அரசியல் பயணத்திற்கும் நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் உறுதுணையாக அமைந்தது. சபையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுகின்ற போது அதிகமாக ஆண்கள் ஆதரவு தந்து என்னுடைய செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். தனிப்பட்ட சவால்களை விட சமூகம் சார்ந்த சவால்களை வெற்றி கொள்வதே மிகவும் முக்கியமானது. வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது எண்ணக்கரு. சமூக சவால்களை வெற்றி கொள்வதற்கு எனது வட்டாரத்திற்குள் சில குழுக்களை அமைத்து அதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதைச்சபையில் சமர்ப்பித்து அவற்றுக்கு தீர்வுகாண எத்தனிப்பேன் அல்லது அந்தக் குழுக்கள் ஊடாகவே அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன். குடிநீர், வீதி, என பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஏனைய சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்துள்ளது.

2018 ஆம் தேர்தலின் போது நிந்தவூர் பிரதேச சபைக்கு ஏழாம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபைக்கு தெரிவாகினேன். வேட்பாளர் தெரிவின் போது எந்தவொரு சவாலும் இன்றி என்கு போட்டியிட முடிந்தது. விகிதாரசார தேர்தல் முறையின் கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்து பின்னர் விகிதாரசார முறையின் கீழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு சபைகளில் செயற்படுகின்ற போது அவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் அது நிச்சமாக அந்த சபையின் தலைவர் அல்லது சபை முதல்வரின் செயற்பாட்டின் ஊடாக தீர்மானிக்கப்படுகின்றது என்பது எனது கருத்து. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று வரும் போது எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சியின் பங்களிப்புடன் ஏனைய செலவுகள் அனைத்தும் எமது சொந்த நிதியிலிருந்தே செலவிடப்பட்டன.

சபை உறுப்பினராக முதன் முதலில் சபைக்கு செல்லும் போது அங்கு அனைத்தும் நியாயமான முறையில் இடம்பெறும் என்ற எண்ணக்கரு என்னுல் இருந்தது. சபை நடவடிக்கைகள் தொடர்பில் எனக்கு பூரண தெளிவு இல்லாமல் இருந்ததோடு ஆரம்ப கட்டத்தில் எமது கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அரசியல் பிரவேசத்தின் பின்னர் பல நிறுவனங்கள் சபை உறுப்பினர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கின்றது. அந்தப் பயிற்சிகள் அரசியல் பயணத்திற்கும் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றது. அரசியலின் ஆரம்ப கட்டத்தில் சட்டங்கள், சபை செயற்பாடுகள் தொடர்பில் பூரண தெளிவு இல்லாமல் இருந்தமையால் அவ்வாறான பயிற்சிகள் அவை குறித்த தெளிவை எமக்கு தந்திருக்கின்றது. நிதி ஒதுக்கீடுகள் வரவு செலவு திட்ட முன்மொழிவுகள், சபைகளின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை உரிய முறையில் எவ்வாறு மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட பலவேறு விடயங்கள் தொடர்பில் இவ்வாறான செயலமர்வுகளின் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சபைகளில் உள்ள குழுக்களில் பெண் உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். எனது வட்டாரத்தில் உள்ள வடிகால் கட்டமைப்பை உரிய முறையில் நிறைவேற்ற முடிந்துள்ளது. அத்தோடு கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களின் உதவிகளோடு வீதி அபிவிருத்தி, இலவச குடிநீர் வழங்கல் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். இதற்கு அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள் தற்போதும் அவர்களது ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கின்றது.

மக்கள் சேவைக்கு மிகவும் முக்கியமானதாக அமைவது நிதி தான். அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பயிற்சிப்பட்டறைகளை மேற்கொள்ளும் போது நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து கட்டாயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அடுத்த கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் போது பெண்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் அத்தோடு பெண் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுமாக இருந்தால் அது சிறந்ததாக அமையும்.

எமது பெண்களை பிரதிநித்துவப்படுத்தி தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. எமது சமூகத்தில் உள்ள பெண்களின் பிரச்சினைகளை தேசிய ரீதியில் வென்றெடுப்பதற்கு தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு அவர்களின் வீடுகளில் இருந்தே அதரவு ஆரம்பமாக வேண்டும். அத்தோடு அவர்களை மக்கள் தெரிவு செய்த நோக்கதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சட்ட ரீதியாக தெளிவுகளையும் மொழி ரீதியில் அவர்கள் ஆற்றல்களையும் அவர்கள் பெற்றிருப்பது மிகவும் சிறந்தது. அடுப்படியில் அடங்கியிருப்பவர்கள் பெண்கள் என்பதை பொய்யாக்கி அற்புதமான நிர்வாகத்தை நடாத்தி சாதணை புரிந்தவர்கள் பெண்கள் ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தயக்கம் காட்டாது துணிந்து செல் நிமிர்ந்து நில் என்ற கோட்பாட்டின் கீழ் அவர்கள் செயற்பட வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அனைவரும் நேர்மையாக செயற்பட வேண்டும். வாக்களிக்கின்ற மக்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்.

பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட விகிதாரமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி அவர்களின் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.

One Text Initiative நிறுவனத்தின் பெண் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களது திறன் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது தயாரிக்கப்பட்டது – இவ் ஆவணத்தை வெளியிடுவதற்கு மேற்படி உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.

Leave a Reply