
சமூக சேவைக்கு பல கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதற்குப் பல வழிகள் உள்ள போதும் அவற்றிலிருந்து விலகியிருக்கின்ற பலருக்கு மத்தியில் சமூக உணர்வுள்ளவர்கள் மக்கள் நலன் சார் விடயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
நலன்புரி சங்கங்கள், மகளிர் அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல அமைப்புக்கள் ஊடாக மக்கள் பணியை முன்னெடுக்கின்ற பலருக்கு மத்தியில், சனசமூக நிலையத்தின் ஊடாக மக்கள் பணியை ஆரம்பித்த சந்திரவதனி காந்தராசா ஆகிய நான் இன்றும் மக்கள் பணிக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றேன்.
யாழ்ப்பாணம் உடுவில் கிழக்குப் பகுதியை வாழ்விடமாகக் கொண்ட நான் எனது கல்வியை இனுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை தொடர்ந்தாலும், உயர்தரப் பரீட்சையை சில காரணங்களால் தொடர முடியாத காரணத்தினால், எமது சன சமூக நிலையத்தால் வழங்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியைப் பெற்று முன்பள்ளி ஆசிரியராக எனது பணியைத் தொடர்ந்தேன்.
1990 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எமது பிறந்த மண்ணைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். நாம் தங்கியிருந்த முகாமிலும் சிறார்களுக்கு வகுப்புக்களை நடாத்தி, முன்பள்ளி ஆசிரியராக எனது பணியைத் தொடர்ந்தேன். அதன் தொண்டு நிறுவனமொன்றின் ஊடாக முன்பள்ளி இணைப்பாளராக நியமிக்கப்பட்டதால், எனக்கு ஏனைய முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்க முடியுமாக இருந்தது. அத்தோடு பல மாவட்டங்களிலும் எமது நிறுவனப் பணிகள் தொடர்வதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
எமது சனசமூக நிலைய மகளிர் குழு அங்கத்துவம் வகித்து, பல பகுதிகளிலும் மகளிர் அமைப்புக்களை உருவாக்கிப் பின்னர் பல பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை ஒன்றிணைத்து வலிகாமம் கொத்தணியை உருவாக்கி மக்கள் பணிக்கு அடித்தளமிட்டனர். அந்தக் காலப்பகுதியில் கொத்தணியுடன் இணைந்து செயற்பட எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பாலும் பொது வேலையாகவே இருந்தது.
எமது வாழ்விடப் பகுதிகளைப் பொறுத்தவரையில் பலவிதமாக பாதிப்புக்களை சந்தித்த பகுதி என்பதோடு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கிராமம் சார் பிரதேசம் என்றபடியால் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்கள் கல்வியை தொடரவேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாடு எமது சமூகத்தில் காணப்படுகின்ற சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனாலும் கல்வியின் பக்கம் ஆர்வமுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி சனசமூக நிலையத்தின் ஊடாக வகுப்புக்களை நடாத்தியுள்ளோம். அத்தோடு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆண்களின் மதுப் பழக்கம் பெரிதும் பெண்களைப் பாதிக்கின்ற விடயமாக இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் மது ஒழிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தியுள்ளதோடு பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தியுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சமூகத்தில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் உருவாகியுள்ளன.
பல சந்தர்ப்பங்களில் சமூகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்குத் தனியாக முயற்சி செய்தாலும் சில சந்தர்ப்பங்களில் சமூக சேவை அமைப்புக்களுடன் இணைந்து என்னால் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமாக இருந்திருக்கின்றது. அத்தோடு யாழ் மாவட்டத்தில் இயங்குகின்ற இளைஞர் கழகங்களுடன் இணைந்து வாழ்வாதாரத்திற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இவ்வாறான சில சமூகப் பணிகளை மாவட்ட ரீதியில் முன்னெடுத்தாலும் ஒரு சில வேலைத்திட்டங்களை கிராமிய மட்டங்களோடு மட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் போராட்ட காலத்தில் மகளிர் அமைப்புக்களுடன் சேர்ந்து பல களப்பணிகளை முன்னெடுக்ககூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் அமைப்பு ஊடாக, தற்காப்பு மற்றும் உளவியல் பயிற்சிகள் எமக்கு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோருக்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. எமக்கான உரிமையை பெற்றுக்கொள்வதற்கு அரசியல் ரீதியாக மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் மலர்வதற்கு முன்பு, அமைப்புக்களுடன் சேர்ந்து அந்தப் பணியை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தேன். அதன் போது தான் 2018 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் போது பெண்களை வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ள வேணடும் என்ற திட்டத்தின் அடிப்படையில் புளொட் அமைப்பு எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர் அணியின் ஊடாக என்னை சந்தித்தனர். இளைஞர் அணி என்னைப் பிரேரித்த போதும் அதில் நாட்டம் காட்டாமல் இருந்தேன். எமது இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அரசியலுக்குள் நுழையக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் பயணத்தில் யாரும் எனக்கு முன்மாதிரியாக இருக்கவில்லை.
பெண் அரசியல்வாதி என்ற அடிப்படையில் களத்தில் இறங்கி வேலை செய்கின்ற போது ஏற்கனவே அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் பூரண ஒத்துழைப்பைத் தந்தது. சில சந்தர்ப்பங்களில் நக்கல் பேச்சுக்கள் வந்தாலும் அது குறித்து கவனம் செலுத்தாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இடமறிந்து எனது கருத்துக்களை வெளியிடுவதால் ஆண்களின் எதிர்ப்பு பெரும்பாலும் குறைவாகவே இருக்கின்றது. சில வேளைகளில் பல உறுப்பினர்களும் என்னிடம் ஆலோசனை பெற்று செயற்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் நிதி ஒதுக்கீடுகள் குறைந்து காணப்பட்டதோடு அமைப்புக்களுடன் சேர்ந்தே எமது சமூகப் பணியை தொடர வேண்டிய நிலை காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அதையும் தாண்டி அதிகமான வேலைத்திட்டங்களை அரசியல்வாதி என்ற வகையில் முன்னெடுக்க முடிந்தது.
தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பிரச்சாரப் பணிகளின் போது எனக்கு பரீட்சயமான மக்கள் என்பதோடு ஒரு சில ஆதரவாளர்களும் எனது பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் என்னை வெளிப்படையாக தெரியாது என்று சொன்னாலும் வாக்களிப்பதாக வாக்குறுதி அளித்தனர். மகளிர் அமைப்பின் ஊடாக மேற்கொண்ட சேவைகள் காரணமாக மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்தோடு பிரச்சாரப் பணிகளுக்காக துண்டுப் பிரசுரங்களை கட்சி சார்பில் வழங்கியதோடு முற்பணமாக ஐயாயிரம் ரூபா வழங்கினார்கள். அதையும் தாண்டி ஏனைய பணத்தை ஒரு சில அதரவாளர்களும் உறவுகளும் தந்துதவியதோடு மீதமுள்ள பணத்தை எனது சொந்த நிதியிலிருந்தே செலவு செய்தேன்.
தேர்தலுக்கு முன் பெற்றுக் கொண்ட சில பயிற்சிகள் காரணமாகவும் வெற்றி பெற்ற பின் பிரதேச சபைக்கு தெரிவாகிய பின்னர் வழங்கப்பட்ட பயிற்சிகளும் எனது சபை நடவடிக்கைளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்றே கூற முடியும். சமூக அணி திரட்டல் என்பதற்கான பயிற்சிகள் இருந்தமையால் சபையால் முன்னெடுக்கப்பட்ட சமூக அணி திரட்டல் செயற்பாட்டை என்னால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமாக இருந்தது. பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுகின்ற போது பல சந்தர்ப்பங்களில் போட்டித்தன்மை இல்லாமல் இருப்பதோடு ஒரு சில சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அதை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் சபையில் உரையாற்றுவதற்கு குறைந்த நேரம் வழங்கப்படுகின்றது. அத்தோடு ஏனைய பெண்கள் பிரேரணைகளை சமர்ப்பிக்கின்ற போது எதிர்க்கின்ற ஆண் உறுப்பினர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். விகிதாரசார முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை எதிர்க்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.
பாதீட்டு முறையின் கம்பெரலிய வேலைத்திட்டத்தில் பல வீதிகளை புனரமைப்பு செய்திருக்கின்றோம். அத்தோடு கட்சி உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருக்கின்றது. ஒரு சிலரின் நிதியிலிருந்து இலகு கடன் முறையொன்றையும் உருவாக்கி அதன் ஊடாக கடனுதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். கல்வி நிலையங்களுக்கான உதவிகளையும் முன்பள்ளிகளுக்கும் பாடசாலைகளுக்கும் தேவையான உதவிகளையும் செய்துள்ளோம். அத்தோடு கம்பெரலிய திட்டத்தில் மூன்றாம் கட்ட நிதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்த வரவுசெலவு திட்ட நிதியிலிருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது வட்டாரத்தில் கிட்டத்தட்ட 45வீதிகள் புனரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதில் தற்போது பெரும்பாலான வீதிகள் புனரமைக்கப்பட்டு தற்போது குறிப்பிட்ட சில வீதிகளே புனரமைக்க வேண்டிய தேவை உள்ளது. அத்தோடு வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற அதேவேளை சில அமைப்புக்களின் உதவிகளோடு வேலைகளை செய்திருக்கின்றோம். அதே போன்று மயான அபிவிருத்தி மற்றும் திண்மக்கழிவு, சுத்திகரிப்பு வேலைகளை பிரதேச சபையூடாகவும் வேறு அமைப்புகள் ஊடாகவும் முன்னெடுத்து வருகின்றேன்.
விகிதாரசார முறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கான பங்களிப்பு என்று வருகின்ற போது தேசிய ரீதியிலான தேர்தல்களிலும் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த முறை செயற்படுத்தப்பட வேண்டும். கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும். இது சட்டமாக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். தேசிய ரீதியான தேர்தல்களிலும் இது சட்டமாக்கப்பட வேண்டும்.
எமது பெண்களை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். திட்ட வரைபுகள் சுயாதீனமாக செயற்படுத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, நிதி பங்களிப்பு வழங்குவது சிறந்ததாக இருக்கும். பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களின்; வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலகு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. அதற்கு கட்சி சம்மதிக்க வேண்டும். கட்சி சம்மதிக்காத பட்சத்தில் தனித்து களமிறங்குவது என்பது சிரமமான விடயமாக இருக்கும். பெண்களைப் பொறுத்த வரையில் நிதிப் பிரச்சினை பெரும் சிக்கலாக இருக்கின்றது. அவ்வாறு களமிறங்குகின்ற பெண்களுக்கு தொண்டு நிறுவனங்கள் நிதி ரீதியில் உதவிகளை வழங்குமாக இருந்தால் சிறப்பாக இருக்கும். வாக்கு வங்கி சரியாக இருந்தாலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. அது படிப்படியாக இடம்பெற வேண்டும். அத்தோடு எமக்குப் பிறகு எமது வட்டாரத்தைப் பிரிதிநித்துவப்படுத்தக் கூடிய பெண்களை இனம்கண்டு கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி அவர்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். மாதர் சங்கங்கள் ஊடாக அவர்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். எதிர்கால அரசியலில் பெண்கள் அதிகமாக பங்கு கொள்ள வேண்டும். பெண்களை வலுப்படுத்துவதற்கு அவர்களை கூட்டாக இணைத்து செயற்படுத்த வேண்டும். அரசியலில் பெரும் பகுதியாக பெண்கள் உருவாக வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
One Text Initiative நிறுவனத்தின் பெண் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களது திறன் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது தயாரிக்கப்பட்டது – இவ் ஆவணத்தை வெளியிடுவதற்கு மேற்படி உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.



