உமாச்சந்திரா பிரகாஷ்

உமாச்சந்திரா பிரகாஷ் ஆகிய நான், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மட்டுவில் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவள். ஆரம்பக் கல்வியை மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாசாலையிலும் உயர்தரக் கல்வியை சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் கற்றேன். வட பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1996 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, தலைநகர் கொழும்பில் வாழ நேரிட்டது. ஊடகத்துறையில் டிப்ளோமாக் கற்கை நெறியைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தேன். தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘சட்டமும் ஆட்சியும்’ பாடநெறியைக் கற்று வருகிறேன். 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரை சக்தி வானொலி, வீரசேகரி பத்திரிகை, சக்தி தொலைக்காட்சி – நியூஸ்பெர்ஸ்ட் ஆகிய ஊடகங்களில் பணியாற்றினேன். ஊடகத்துறையில் இணையம், சஞ்சிகை, பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய பல துறைகளிலும் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு என்ற சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பாமன்கடை மேற்கு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டேன். வட்டார ரீதியில் என்னால் வெற்றி பெற முடியாவிட்டாலும், கொழும்புத் தெற்கு தேர்தல் தொகுதியில் கட்சி சார்பாக அதிகூடிய வாக்குகளைப் பெற்ற காரணத்தினாலும், பெண்களுக்கான 25 சதவீதம் ஒதுக்கீடு காரணமாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கொழும்பு மாநகர சபைக்கு விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் மேல் மாகாண முதலமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் வழிகாட்டலில் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு ஆதரவைக் கொடுத்த காரணத்தில், 2020 ஆண்டு கொழும்பு மாநகர சபை உறுப்புரிமையை இழந்தேன். ஆயினும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டேன். பாராளுமன்றத் தேர்தலில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனது ஒருங்கிணைப்புச் செயலாளராக என்னை நியமித்தார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளராகவும், ஐக்கிய பெண்கள் அணியின் உப தலைவர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ளேன்.

எனது பாடசாலைக் காலத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் வளர்க்கப்பட்டேன். அத்துடன் யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்தில் வாழ்ந்த அனுபவமும் சிறந்த தலைமைத்துவப் பயிற்சிகளை எனக்குக் கொடுத்திருக்கின்றது. யுத்த காலமானது, இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக மாற்றுவது என்ற பாடத்தையும், அனுபவத்தையும் எனக்கு கொடுத்திருக்கின்றது. ஊடகத்துறையில் நான் பணியாற்றிய இரண்டு நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் திரு. ஆர். இராஜமகேந்திரன் மற்றும் திரு. குமார் நடேசன் ஆகியோர் எனது திறமையை அடையாளம் கண்டு அங்கீகரித்தார்கள்.

யுத்தம் நிறைவடைந்த  2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்  பேராசிரியை வசந்தி அரசரட்ணம், வரலாற்றுத்துறையின் தலைவர்  பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் மற்றம் கலைக்கேசரி ஆசிரியை திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோர்களின் வழிகாட்டல்களுடன், வீரகேசகரி நிறுவனமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாண வாழ்வியல்’ என்னும் கண்காட்சியில் எனது பங்களிப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெட்டகம், நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில், யாழ்ப்பாணத்தைத் தேடி மற்றும் அணிகலன் ஆகிய எனது ஆய்வு நூல்களின் உருவாக்கத்திற்கு அரசாங்கத்தில் வழங்கப்படும் ‘கலைச்சுடர்’ தேசிய விருது எனக்குக் கிடைத்தது. என் இனத்தின் தேடலுக்கான சிறந்த அங்கீகாரமாக நான் அதைக் கருதுகிறேன்.

2018 ஆம் ஆண்டு அரசியல் பணி தொடங்கிய காலப்பகுதியில் இருந்து, பெண்களின் சுயதொழில் முன்னேற்ற செயற்பாடுகளை தலைநகரை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்திருக்கிறேன். மேல் மாகாண சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின், நிதி ஒதுக்கீடுகள் ஊடாக குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்தது. தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர், இரான் விக்ரமரத்ன அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஊடாக 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியினுடைய பிரதிச் செயலாளராகவும் பெண்கள் அணியின் உப தலைவராகவும், குறித்த நிதியை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். குறிப்பாக பெண்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அத்துடன் அரசியலுக்கு அப்பால் எமது இனத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையோடு இணைந்து வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் போன்ற விடயங்களில் பங்களிப்பு வழங்கி வருகிறேன்.

உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு என்பதை ஆண்கள் ஒரு விபத்தாகவே கருதுகின்றார்கள். பெண்களைப் பொறுத்தவரையில் அதிர்ஷ்ட வாய்ப்பாகும். ஏனெனில் பெண்கள் அரசியலுக்குள் வருவதென்றால் குடும்ப அரசியல் பின்னணி இருக்க வேண்டும், பிரபலமான பாடசாலைகளில் கல்வி கற்றிருக்க வேண்டும், ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும், பண வசதி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மத்தியதரக் குடும்ப பெண்கள் அல்லது சாமானிய பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை அவ்வாறு வந்தாலும் வாய்ப்புக்கள் இல்லை என்பது பொதுவான கருத்தாகும். அவ்வாறான சந்தரப்பத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு எமக்கான அரசியல் வரப்பிரசாதம் ஆகும்.

அரசியல் செயற்பாடுகளில் பங்குபற்ற பெண்கள் காட்டும் குறைவான ஆர்வம், இலங்கையின் தற்போதைய அரசியல் முறைமையில் காணப்படும் வன்முறை கலாச்சாரம் மற்றும் ஊழல் போன்ற எதிர்மறையான குணாம்சங்கள், அரசியல் கலாசாரத்தின் மாற்றங்கள், விசேடமாக மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது காணப்படும் நம்பிக்கையின்மை, சமூக உணர்வு மற்றும் ஒழுக்கச் சீரழிவுகள், விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், அரசியல் கட்சிக்குள் காணப்படும் குறைவான உள்ளக ஜனநாயகம், பெண்களுக்கு வேட்பு மனுக்களை பெற்றுக்கொடுப்பதில் காட்டும் குறைவான ஆர்வம், தேர்தல் மோசடிகள் போன்ற காரணிகளை அடிப்படை அரசியல் தடைகளாக நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அரசியல் தொடர்பான எந்தவொரு பயற்சியோ அனுபவமோ எனக்கு இல்லை. கொழும்பு மாநகர சபை உறுப்பினரான பின்னர் அரச, அரச சார்பற்ற மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி செயலமர்வுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவ்வாறான பயிற்சி செயலமர்வுகள் எனது அரசியல் பயணத்தில் சிறந்த வழிகாட்டியாக இருந்ததுடன், எனது அரசியல் வெற்றிக்கும் காரணமாகவும் அமைந்தன. அவற்றில் வன் டெக்ஸ்ட் (One Text) நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது.

எனது அரசியலைப் பொறுத்தவரையில், எமது இனத்தின் உரிமை சார்ந்த அரசியலாகவே உள்ளது. எமது இனத்தின் உரிமைகளை ஜனநாயக வழிமுறை ரீதியான அரசியல் ஊடாக வென்றெடுக்க வேண்டும். அரசியலுக்கு வரக்கூடிய பெண்களைக் கருவேப்பிலையாக பயன்படுத்தும் கட்சிகளைத் தூக்கி எறிய வேண்டும். தேர்தல் காலத்தில் மாத்திரம் பெண்களைப் பயன்படுத்தி, வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிப்பவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் 2025 பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்காக மக்களுக்கு தேவையான நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றேன். ஆனாலும் மக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மக்கள் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்க்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். பாராளுமன்ற கட்டமைப்பு, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்களில் உள்ள வளங்களை மிகச்சரியான முறையில் எப்படி மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு ஏற்பட கூடிய நிர்வாக ரீதியான சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டும். இலஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையான ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். வானம் வசப்படும் என்ற நம்பிக்கையில் அரசியலில் தொடர்ந்து பயணிக்கிறேன்.

(இது One Text Initiative இன் படைப்பாகும் மற்றும் இச் சுருக்கமானதும் செம்மையாக்கப்பட்டதுமான கட்டுரைக்கு OTI பொறுப்பேற்கிறது) 

Leave a Reply