
நான் நாகேந்திரன் தர்ஷினி. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்திய முகாம் பகுதியில் வசிக்கின்றேன். ஆரம்பக் கல்வியை சேனைக்குடியிருப்பு மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனையிலும் தொடர்ந்தேன். உயர் தரத்தின் பின் கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை. அதன் பின்னர் மக்கள் சார் தொண்டுப்பணிகளை மேற்கொண்டேன். எனது தந்தை நான் சிறிய வயதிலே இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். இன்று வரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. நானும் தம்பியும் அம்மாவும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இருந்த போது அம்மம்மாவும் அம்மப்பாவும் பெரிதும் துணையாக இருந்தார்கள். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
சிறு வயது முதலே அடுத்தவர்களின் பிரச்சினை குறித்து அக்கறை செலுத்தி உடனடியாக உதவி செய்வேன். சர்வோதய தொண்டு நிறுவனத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான சில உதவிகளை செய்து வந்தேன். அந்த நிறுவனத்தின் நீதிச் சேவைப் பிரிவில் பணியாற்றினேன். பெண்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்கியதோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தேன். 2005 ஆம் ஆண்டு சமாதான அமைப்பு எனும் தொண்டு அமைப்பில் இணைந்து பணியாற்றினேன். 2003 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மூதூர் பிரச்சினை ஏற்பட்ட போது, இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு தேவையான நிவாரணப்பணிகளில் ஈடுபட்டேன். அந்த அமைப்பில் இருந்த இளைஞர்களுடன் இணைந்து நான் தனிப்பெண்ணாக செயற்பட்டேன். இராணுவ தலையீடு மற்றும் இரகசியப் பொலிஸாரின் தலையீடுகள் காரணமாக, நான் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர் சுனாமி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தேன். பெற்றோரை இழந்த ஒரு பிள்ளையின் கல்விச் செலவை முழுமையாக பொறுப்பேற்றுக்கொண்டேன். கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தகவல்களை சேகரித்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி மக்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கினோம். இந்த அனைத்து செயற்பாட்டிற்கும் என்னுடைய மாமா ஒருவர் தான் காரணம். சோர்ந்து போய் காணப்பட்ட என்னை சமூக சேவைக்குள் ஈர்த்துவிட்டவர் அவர் தான். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து கொண்டு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வை பிற்காலத்தில் நானே எனக்குள் வளர்த்துக்கொண்டேன்.
சமூகத்தில் உள்ள பெண்கள் பெரும் பாலும் வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறாக வறுமையின் கீழ் வாழ்கின்ற சிறு வயது பெண் பிள்ளைகளை தவறாகப் பயன்படுத்துகின்றவர்கள் சமூகத்தில் இருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு சம்பவம் சில காலங்களுக்கு முன் நடந்தது. கடைகளில் தொழில் புரிகின்ற பெண்கள் தொடர்பிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கும் வழிவகைகளை செய்திருக்கின்றேன். பெண்களை இலக்கு வைத்து வழங்கப்படுகின்ற நுண்கடன்களால் பலர் பாதிக்கப்படுகின்றார்கள். கைத்தொழில் இன்மையால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள மற்றும் கணவனை இழந்த பெண்களும் தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு நெசவு இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றேன். வறுமையினால் விபச்சாரம் செய்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெண்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றேன். வாழ்வாதாரத்தை இழந்த பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் முக்கிய கவனம் செலுத்தியிருக்கின்றேன். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுகின்ற சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். ஆனாலும் சமூகத்திற்கு எந்தளவு சேவை செய்தாலும் அதில் திருப்தியடையாத மக்களும் இருக்கின்றார்கள்.
எமது கிராமத்தைப் பொருத்த வரையில் குழுவாக இணைந்து செயற்படுவதற்கு பெரும்பாலும் இணக்கம் தெரிவிப்பதில்லை. நகர்புறங்களைப் போன்று எமது கிராமத்தில் செயற்படுகின்ற குழுக்கள் இல்லை. ஆகையால் அண்டிய கிராமத்தில் உள்ள இளைஞர் அமைப்பு மற்றும் துளிர் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றேன். அத்தோடு சில தனி மனிதர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்கின்றேன். சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது அனுபவமுள்ளவர்களுடன் கலந்துரையாடுவேன். போது அவர்களும் அதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள். கடந்த வருடம் அவ்வாறு கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகளை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தது. வெளியில் உள்ள சில அமைப்புக்களும் பல்வேறுபட்ட ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள். அரசியல் ரீதியாகவும் பலர் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள். பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏ.டபிள்யு. என்ற அமைப்பு பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குகின்றார்கள். சிறுவர் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர் சேவையின் உறுப்பினர்கள் என பலரும் இணைந்தே செயற்படுகின்றோம்.
பொது மக்களுக்குத் தேவையான விடயங்களில் அரசியலை உட்புகுத்தாது செயற்படுகின்றோம். மாவட்ட மட்டத்தில் உள்ள அமைப்புக்களோடு இணைந்து செயற்படுவதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆர்ப்பாட்டங்களின் போது தேசிய ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.
எனது அரசியல் பிரவேசத்திற்கு எந்தவொரு அரசியல்வாதியும் முன்மாதிரியாக இருந்ததில்லை என்றே கூற வேண்டும். பொய்யில்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் தான் ஆரம்பத்தில் இருந்தேன். பொது வேலைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனிடம் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியதை அடுத்து என்னை அரசியலுக்கு ஈர்க்க வேண்டும் என அவர் எதிர்பார்த்துள்ளார். அவர் மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற போது எமது கிராமத்தில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் கதைத்திருக்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தில் பிரதேச சபைத் தேர்தலுக்கு பெண் பிரிதிநிதித்துவம் தேவை என தேர்வு இடம்பெறுகின்ற போது பெண்கள் அனைவரும் தர்ஷினி என எனது பெயரைப் பிரேரித்தார்கள். என்னுடைய பிரதேச மக்கள் தான் என்னை அரசியலுக்குள் கொண்டுவந்தார்கள். நானாக விரும்பி அரசியலுக்குள் வரவில்லை. நான்கு கட்சிகள் என்னைத் தேடி வந்தார்கள் ஆனாலும் நான் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டேன். தேர்தலுக்காக வெறும் ஐம்பதாயிரம் ரூபா மாத்திரமே செலவு செய்திருக்கின்றேன். அத்தோடு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவியாக இருக்கின்றேன்.
அரசியல் பயணத்தைப் பொருத்த வரையில் கட்சித் தலைமையகம் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களும் பூரண ஒத்துழைப்புக்களை தந்துகொண்டிருக்கின்றார்கள். கட்சிக் கூட்டங்களின் போது எனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு எந்த இடையூறும் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பிரதேச சபையில் சமர்ப்பித்த ஒரு பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்னை தாக்குதவற்கு வந்த சந்தர்ப்பமும் இருக்கின்றது. நாவிதன்வெளி பிரதேச சபையில் மகளிருக்காக இது வரையில் நிதி ஒதுக்கப்படவில்லை. தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒரு அரசியல்வாதி எமது பெண்பிள்ளைகளை வாகனங்களில் கூட்டிச் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொது, வேறு கட்சி சார்ந்த ஒருவர் என்னை அச்சுறுத்திய ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. மகளிரின் வாழ்வாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கைக்கு அமைய தற்போது நிதி ஒதுக்கப்பட்டு, அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மகளிர் குழுவொன்றை உருவாக்குவதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தமிழ் பேசக்கூடிய மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேட்பாளர் தெரிவின் போது ஒருவரைத் தவிர வேறு எதிர்ப்புக்கள் இடம்பெறவில்லை. ஆனாலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினேன். பிரச்சாரப் பணிகளின் போது சில சுயேட்சைக் குழுக்கள் தவறான விடயங்களைப் பரப்பி பிரச்சாரம் செய்தார்கள். பல அவதூறுகளை பரப்பினார்கள். ஆனால் எமது பிரதேச மக்கள் பலர் என்னை நம்பிக்கையின் அடிப்படையில் வலுப்படுத்தினார்கள். சில கட்சிகள் பணத்தை வழங்கி வாக்குகளைப் பெற முயற்சி செய்தன. விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகளை பல ஆண்கள் கௌரவமாக பார்ப்பதில்லை. பிரதிநிதித்துவத்திற்கு பெண்கள் தேவை என்றே கருதுகின்றார்கள். சில பெண் உறுப்பினர்களை செயலமர்வுகளுக்கும் பயிற்சிகளுக்கும் அனுப்புவதில்லை.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பயிற்சிகள் காரணமாக எம் மத்தியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பிரேரணை சமர்ப்பிக்கும் முறை, அவற்றை கையாள்கின்ற முறை, எவ்வாறான பிரச்சினைகளை சட்டத்தின் பிரகாரம் எவ்வாறு முன்னெடுப்பது என்பது போன்ற பல்வேறு அனுகுமுறைகளுடன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒரு பெண் பிரதிநிதி பாதிக்கப்டுகின்ற போது அவற்றை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதை இவ்வாறான தொண்டு நிறுவனங்களின் உதவியோடு கையாள முடியும். ஊடகத்தையும் சமூக வலைத்தளங்களை கையாள்கின்ற விதம் குறித்தும் அரசியல் யாப்பு தொடர்பிலும் எமக்கு தெளிவூட்டுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். பெண் வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற போது மிகவும் நிதானமாகக் கையாள வேண்டும். வேட்பாளர் பட்டியிலில் பெண்கள் தேவை என்று கருதுகின்றார்களே ஒழிய பெண் அரசியல்வாதிகள் தேவை என்பதை கருதுவதில்லை. பெண்கள் சபைகளில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற சில ஆணாதிக்கவாதிகள் இருக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கதைக்க முற்படுகின்ற போது கதைக்கவிடாமல் தடுக்கின்ற பல சந்தர்ப்பங்கள் உண்டு. கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்குள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அடுத்த மகாண சபைத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் அணிசார்பில் மகளிர் வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை கட்சித் தலைமையகத்திற்கு வழங்கியிருக்கின்றோம். அது நிறைவேற்றப்படும் என்று கருதுகின்றோம். அதில் அம்பாறை மாவட்டத்தில் என்னுடைய பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பெண்கள் சமூகம் பெரும்பாலும் ஆண்களுக்கு வாக்களிக்கின்ற முறையொன்று காணப்படுகின்றது. அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கருதுகின்றேன். கட்சி அரசியலுக்கு அப்பால் பெண்களின் தேவையை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும். கோட்டா முறையை விட பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.



