தனுஜா ஜெயராஜா

யுத்த வடுக்களின் தாக்கம் தமிழ் மக்களை முழுமையாக வீழ்ச்சியடையச் செய்ததோடு அது எம்மையும் விட்டு வைக்கவில்லை. வட மாகாண மக்களுக்கு யுத்தம் தந்த வலிகளும் வடுக்களும் இன்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றது.

அரசியல் பிரவேசத்திற்கு உந்து சக்தியாக இருந்த எமது உறவுகள் எம்மை விட்டு பிரிந்திருந்தாலும் அதன் தாக்கம் இன்றும் உணரக்கூடியதாக இருக்கின்றது. பல சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கையை முன்னெடுத்த தனுஜா ஜெயராஜா ஆகிய நான் எனது கல்வியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தொடர்ந்தாலும் யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தினால் கல்வி நிலையங்களை காலத்துக்கு காலம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது பெற்றோர் அரச உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சிறு வயதிலே பெற்றோரை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதோடு தாயின் சகோதரியின் பாதுகாப்பின் கீழ் வளரக்கூடியதாக இருந்தது. ஐந்து சகோதரர்களுடன் வளர்ந்ததோடு பிற்பட்ட காலத்தில் ஒரு தனியார் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளேன்.

திருமண வாழ்க்கையின் பின்னர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச்சென்ற கணவரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும் எனது இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக நின்று வளர்த்தேன். எதிர்பாராத விதமாக எனது மூத்த மகன் விபத்தொன்றில் எம்மை விட்டுப் பிரிந்தாலும் எனது அரசியல் பிரவேசம் எனது மூத்த மகனின் கனவாக இருந்தது. வலி சுமந்த வாழ்க்கையோடு மக்கள் பணியை முழுமையாக செய்துகொண்டு வருகின்றேன்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்ததோரின் உதவியோடு தற்காலத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருக்கின்ற எமது உறவுகளின் உதவிகளோடு நிவாரணப் பணிகளை முன்னெடுத்தும் வருகின்றேன். அரசியலின் ஊடாக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சரியான சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் சுயதொழில் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை வெளிநாட்டில் உள்ள உறவுகளின் உதவிகளோடு முன்னெடுக்கக்கூடியதாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் குடிநீர் விநியோகம், மலசலகூட வசதிகள் மற்றும் தேவாலயங்களுக்கான சில உதவிகள் என ஒரு சில வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியுமாக இருந்தது.

அரசியல் ரீதியாக நோக்கும் போது பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை அரசியல் பிரவேசம் என்பதால் பிரதேச சபையின் ஊடாக மக்கள் சேவையை முன்னெடுப்பது என்பது பாரிய சவாலாக இருக்கின்ற ஒரு விடயமாகும்.

எமது சமூகத்தில் வாழ்கின்ற பெண்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றார்கள். கணவனை இழந்த ஒரு பெண்ணாக இருந்தால் பல ஆண்கள் அவர்களை தவறாக பயன்படுத்துவதற்கு எத்தணிக்கின்றார்கள். அவர்களின் அலுவல்களை செய்துகொள்வதற்கு முயற்சிக்கின்ற போது பல பெண்கள் வற்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சில அமைப்புக்களுக்கு பெண்கள் பொறுப்பு தாரர்களாக வருகின்ற போது அதற்கு இணங்காத ஆண்கள் அவர்களை இம்சிக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. பெண்களின் கீழ் சேவையாற்றுவது என்பது ஒரு கேவலமான செயற்பாடாக கருதுகின்ற ஆண்கள் சமூகத்தில் இருக்கின்றார்கள். சமூகத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவையாக இருக்கின்றது.

பெண்ணொருவர் தனித்து வாழ்கின்ற போது அவர்களுக்கு ஏற்படுகின்ற துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் நிச்சயமாக அவதானமாக இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான சவால்களை எதிர்நோக்குகின்ற பெண்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கின்றேன். வீடுகளிலும் வேறு இடங்களிலும் அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது, சில பேர் வீடுகளை விட்டு வெளியேறி மாற்றுப் பாதையைத் தேட முயற்சிக்கின்ற வேளையில் வழி தவறுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இளம் வயதுப் பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது ஒரு ஆசிரியராக அதிபராக அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு அறக்கட்டளைகள் ஊடாகவும் வெளிநாட்டு உறவுகளின் உதவியோடும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியான ஒரு விடயம். வறுமையின் கீழ் உள்ள மாணவர்களிடம் கட்டணங்கள் இன்றி வகுப்புக்களை இன்றும் நடாத்த முடியுமாக இருக்கின்றது. பிரதேச எல்லையை தாண்டி பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககூடிய சந்தர்ப்பங்கள் இன்னும் ஏற்பட வில்லை என்பதோடு பிரதேச எல்லைக்குள் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருக்கின்றது. தொழில்வாய்ப்பு என்று வருகின்ற போது பிரதேச எல்லையைத் தாண்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்திருக்கின்றது. வறுமைத் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் போய்ச் சேர வேண்டும் என்பதே எனது இலக்காக இருக்கின்றது.

அரசியல் விழிப்புணர்வு எனக்கு போதியளவு இல்லாவிட்டாலும் கட்சி பேதமின்றி மக்களுக்கு சேவை செய்தமையும் எனது மகனின் கனவுமே அரசியல் பிரவேசத்திற்கு காரணமாக அமைந்தது.  எனினும் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றேன். அரசியல் பயணத்தின் போது எனது கட்சியை பலர் பல்வேறு விதமாக விமர்சித்தாலும் கட்சித் தலைமையகம் பெண்களை பிரித்துப் பார்க்காமல் அவர்களுக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கியதோடு உள்ளுராட்சி தேர்தலின் போது அதிக பெண் உறுப்பினர்களை எமது கட்சி உள்வாங்கியிருக்கின்றது. கட்சிக்குள் இருக்கின்ற பெண்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி செயற்படுகின்ற போது ஒரு சில சக ஆண் உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். தலைமை திறமைக்கு இடமளிக்கின்ற போது அதை தடுக்கின்ற சிலர் இருக்கின்றார்கள்.

எமக்கான உரிமைகளைப் போராடி பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. நாம் போராடுகின்ற போது எமது குண செயற்பாடுகளை விமர்சிக்கின்ற தன்மையை உருவாக்குகின்றார்கள். எம்மை அவமாரியாதையாக நடத்த எத்தணிக்கின்றதோடு இவை பாரிய சவாலாக இருக்கின்றன. ஆனாலும் கட்சித் தலைமை என்னிடம் ஒப்படைத்திருக்கின்ற பணிகளை சவாலுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றேன். தற்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் 11 ஆம் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினராக இருக்கின்றேன்.

தேர்தல் காலத்தில் என்னுடைய சூழ்நிலை காரணமாக பிரசாரப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் போனாலும் கணிசமாக வாக்குகளைப் பெற்றமையால் விகிதாரசார அடிப்படையில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டாலும் எமது உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுக்கின்ற போது அதைத் தடுப்பதற்கு முயற்சிக்கின்ற கும்பல்களும் இருக்கின்றமை கவலையான ஒரு விடயமாகும்.

தேர்தலுக்கு முற்பட்ட காலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயலமர்வுகளில் கலந்துகொள்ளா விட்டாலும் அரசியல் பிரவேசத்தின் பின்னர் பல பயிற்சிகளில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் பிரதேச சபையால் பயிற்சிச்செயலமர்வுகள் குறித்து எமக்கு அறிவிக்காமல் விட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. சபையின் ஆரம்பக் கூட்டங்களின் போது எந்தவொரு அனுபவமும் இல்லாமல் இருந்ததோடு பிற்பட்ட காலத்தில் அது தொடர்பில் பூரண தெளிவொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. 

அரசியலைப் பொருத்த வரையில் 25 வீதமான பெண்களின் பங்களிப்பு என்பதற்கு எனது எதிர்ப்பை வெளியிடுவதோடு தேசிய அரசியலில் பெண்களுக்கு சரி பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது. வசதி படைத்த பலர் அரசியலுக்கு வருகின்றார்கள் பணத்தை அடிப்படையாக வைத்தே பலர் அரசியலில் ஈடுபடுகின்றமையால் விகிதாரசார முறை மூலம் அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற பலர் மக்கள் சேவையை சரியாக செய்ய முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

அதே வேளை மகளிருக்கான அனைத்து உரிமைகளும், அனைத்து சபைகளின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்திருக்கின்றேன். சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக எனது குரல் ஓங்கி ஒலிக்கப்படுவதால் அந்த உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

சபைகளால் அமைக்கப்படுகின்ற குழுக்களில் பழைய உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் அதிலும் குறிப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற போக்காக இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் அது குறிதது பூரண தெளிவைப் பெற முடியாத நிலையில் நான் இருந்த போதும் பிற்பட்ட காலத்தில் அது தொடர்பில் போராடி குழுக்களில் இடம்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. நிதிக்குழு, சுகாதாரக் குழு, திட்டமிடல்குழு என அனைத்து குழுக்களிலும் பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதே எமது நோக்கம்.

வருடாந்த பாதீட்டின் போது மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி சில சந்தர்ப்பங்களில் எமக்கு கிடைக்காமல் புறந்தள்ளப்படுகின்ற நிலையும் இருக்கின்றது. அதையும் பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தவிசாளருடன் போராடி பாதை புனரமைப்பிற்காக நிதியை பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.

எமது பிரதேசத்தில் இருக்கின்ற பெரும்பாலானோருக்கு சிங்௧ளம் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். மத்திய  அரசாங்க உத்தியோகத்தர்களுடன் எமது நிலைமையை தெளிவுபடுத்த முற்படுகின்ற போது மொழி பாரிய சிக்கலாக இருக்கின்றது. எனவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பயிற்சிச்செயலமர்வுகளின் போது மொழிப் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.

தேசிய அரசியலுக்குள் உள்வாங்கப்டுகின்ற போது கட்சியின் சில உறுப்பினர்கள் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை இருக்கின்றது. மாகாண சபை அல்லது பாராளுமன்றத் தேர்லாக இருந்தாலும் எதிர்ப்புக்களை மீறி வாய்ப்பு கிடைக்கின்ற போது அதை எதிர்நோக்க நான் தயாரான நிலையில் இருக்கின்றேன். அத்தோடு திறமை உள்ள பெண்களை இனங்கண்டு அவர்களை அரசியலில் உள்வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் அத்தோடு ஆண்கள் மத்தியில் காணப்படுகின்ற பொறாமை களையப்பட வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் இல்லை என்றால் காலா காலத்துக்கு இதே நிலையை எமது சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

(THIS IS A PRODUCT OF ONE TEXT INITIATIATIVE & OTI IS RSPONSIBLE FOR THIS SHORTER & EDITED VERSION OF THE TEXT)

Leave a Reply